ஏடிஎம் மையத்தில் நபரை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் திருடிய பலே கொள்ளையன் கைது!

கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த நபரை தட்டி தூக்கிய கிருஷ்ணகிரி போலீசார்
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே கே.திப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஜித், கடந்த 18-ம் தேதி குந்தாரப்பள்ளி அருகே உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி அஜித் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கியுள்ளார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவரது ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர், அஜித் உண்மையான ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வேப்பனப்பள்ளி அருகே உள்ள மற்றொரு தனியார் ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.44,000 பணத்தை எடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அஜித் செல்போனுக்கு வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஏடிஎம் மையத்திற்கு சென்று பார்த்தபோது, தன்னிடம் கொடுக்கப்பட்டது போலியான ஏடிஎம் கார்டு என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அஜித் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பணத்தை திருடியவர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த திம்மராயப்பா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த திம்மராயப்பாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி.எஸ். அனிதா உத்தரவின் பேரிலும், காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரிலும், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் பத்மாவதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையில் உதவி காவல் ஆய்வாளர் பயாஸ், தலைமை காவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட திம்மராயப்பா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், அவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த நபரை நூதனமாக ஏமாற்றி, போலியான ஏடிஎம் கார்டை கொடுத்து ரூ.45 ஆயிரத்தை திருடிச் சென்ற பலே கொள்ளையனை போலீசார் கைது செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
T. சாமுவேல்
மாவட்ட நிருபர்

