மக்கள்–காவல்துறை இடையேயான நம்பிக்கையை வளர்க்க தமிழகம் முழுவதும் நடை ரோந்து
சட்டம் மற்றும் ஒழுங்கை திறம்பட பராமரித்தல், குற்றங்களை முன்கூட்டியே தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு காவல் பணியை அதிகரித்தல் (Visible Policing) ஆகிய நோக்கங்களுக்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., மாநிலம் முழுவதும் நேரடி கள காவல் பணிகள் மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் ஒரே மாதிரியான உயர்தர செயல்திறனுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்நடவடிக்கைகள் காவல்துறையின் கண்காணிப்பு காவல் பணியை அதிகரிப்பதோடு, பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும், சமூகத்துடனான காவல்துறையின் தொடர்பை வலுப்படுத்தவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் அனைத்திலும் காவல்துறையின் செயல்பாட்டை மேலும் திறன்மிக்கதாக மாற்றவும் உதவும்.
அதன் ஒரு பகுதியாக, காவல் நிலைய அதிகாரி (SHO) முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP/DCP) வரை, அனைத்து அதிகாரிகளும் தங்களது எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து காவல் நடை ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் பொதுமக்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை அறிதல், நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல், சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்காணித்து எச்சரித்தல் மற்றும் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் ஆகியவை ஆகும்.
இவ்வுத்தரவின்படி, மாநிலம் முழுவதும் விரிவான காவல் நடை ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 03.06.2026 அன்று 34 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்/துணை ஆணையர்கள், 28 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் /கூடுதல் துணை ஆணையர்கள், 146 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்/உதவி காவல் ஆணையாளர்கள் மற்றும் 499 காவல் ஆய்வாளர்கள் இந்த காவல் நடை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 04.06.2026 அன்று மாநிலம் முழுவதும் காவல் நடை ரோந்து பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 56 காவல் கண்காணிப்பாளர்கள்/ துணை ஆணையர்கள், 39 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்/கூடுதல் துணை ஆணையர்கள், 215 துணை காவல் கண்காணிப்பாளர்கள்/உதவி காவல் ஆணையர்கள் மற்றும் 866 காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
மேலும் 05.06.2026 அன்று மாநிலம் முழுவதும் காவல் நடை ரோந்து பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 45 காவல் கண்காணிப்பாளர்கள்/துணை ஆணையர்கள், 32 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்/கூடுதல் துணை ஆணையர்கள், 203 துணை காவல் கண்காணிப்பாளர்கள்/உதவி காவல் ஆணையர்கள் மற்றும் 909 காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
இந்த காவல் நடை ரோந்துப் பணிகளின் மூலம், மூத்த காவல் அதிகாரிகள் குற்றம் நடைபெறும் பகுதிகளில் நேரடியாக கள ஆய்வுசெய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற்று, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், உள்ளூர் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இந்த முயற்சி உதவியது.
இந்த காவல் நடை ரோந்துப் பணிகளுக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது. மூத்த காவல் அதிகாரிகளின் நேரடி பங்கேற்பு மற்றும் களப்பணி, பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியதுடன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்வதில் தமிழ்நாடு காவல்துறையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
மாநில காவல்துறைத் தலைமை இயக்குநர் /படைத்தலைவர் (DGP / HoPF), இத்தகைய காவல் நடை ரோந்துப் பணிகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் காவல் களப்பணியை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுடனான தொடர்பை மேம்படுத்தி, அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

